கரூர் சம்பவம் விஜய்யின் குடும்பத்திலும் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விஜய்யை விமர்சித்தது மற்றும் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என பாய்ந்த வழக்குகள், இதை யெல்லாம் பார்த்த விஜய்யின் குடும்பம் கலங்கிப்போயிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் மாமா நடத்தும் மிகப்பெரிய ஷிப்பிங் கம்பெனியில் போர்டு மீட்டிங் நடந்துள்ளது. அந்தக் கம்பெனியில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மாமா மகள் எல்லோரும் டைரக்டர்கள். அந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்திருக்கிறது.
அதில் பேசிய விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், "எல்லோரும் சின்ன வயசில் சேராதவர்களோடு சேர்ந்து கெட்டுப் போவார் கள். விஜய் ஐம்பது வயசில் சேராதவர்களோடு சேர்ந்து கெட்டுப்போகிறான். அவன் இந்த வயசுல வீணாப்போவான்னு நான் நினைக்கல. இப்போ 41 பேர் செத்துப்போன கரூர் சம்பவத்துல மாட்டிக்கிட்டான். அவன் இதைவிட மோசமான இன்னொரு சம்பவத்துல இன்னொரு மோசமான நிலைமைல கொண்டு போய் மாட்டி விடுவாங்க.. ரஜினிக்கு அரசியலிலிருந்து வெளியே போறதுக்கு கொரோனாவோட கோவிட் காலகட்டம் உதவுச்சு. அதேபோல கரூர் சம்பவத்த காரணமா வச்சு "நான் அரசியலுக்கு நல்லது செய்யத்தான் வந்தேன். இப்படி ஜனங்கள சாகடிக்க வரல' என்று சொல்லி அரசியல விட்டு வெளியே போயிருக்கலாம் விஜய்''’என எஸ்.ஏ.சந்திரசேகர் வருத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால், “ஆதவ் அர்ஜுனா இவரை விடுவதாக இல்லை. விஜய்யை டெல்லி பா.ஜ.க.வில் கொண்டுபோய் லாக் பண்ணிவிட்டார் என விஜய்யின் உறவினர்கள் வருத்தப்படுகிறார்கள். விஜய்யை அரசியலுக்கு இழுத்து வந்தது லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் கேம் பிளான்தான். புதுச்சேரியில் மேயராக இருந்த ஒரு குடும்பத்தின் வாரிசு மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் டீக்கடை நண்பர்கள். "புதுச்சேரியிலும் தமிழகத்திலும் லாட்டரி மார்ட்டின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதுதான் விஜய்யை அரசியலுக்கு கொண்டுவந்ததன் பின்னணி சதி. புதுச் சேரியில் லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வர் ஆக வேண்டும். தமிழகத்தில் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் ஆக வேண்டும். இரண்டு இடத்திலும் ஆட்சியமைக்க பா.ஜ.க. உதவவேண்டும். மார்ட்டின் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை நீர்த்துப்போக வைக்கவேண்டும். இதற்காகத்தான் மீடியா உதவியுடன் விஜய் அரசியலுக்கு இழுத்துவரப்பட்டார்'’என தெளிவாகவே கணிக்கிறார்கள் விஜய்யின் உறவினர்கள்.
கரூர் சம்பவம் நடந்த சில நாட்களில் நமக்கு அரசியல்லாம் செட்டாகாதுப்பா என விஜய் புலம்பிக் கொண்டிருந்தார். அவரை ‘விடாது கருப்பு’ என்கிற பாணியில் துரத்தித் துரத்தி வீடியோ போட வைத்தது ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமிதான். முழுவதும் கிறிஸ்தவர்கள் கோஷ்டி கானமாக இயங்கும் தலைமையில், பா.ஜ.க. என்கிற இந்துத்வா கட்சியை இணைத்து ஒரு புதிய மத சமூக அரசியலை செய்துகொண்டி ருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இப்பொழுது கூட கரூருக்கு செல்ல விஜய் தயாராக இல்லை. கரூருக்கு சென்று கே.டி.ஆர்., எஸ்.கே.டி. ஆகிய திருமண மண்டபங்களை விசிட் செய்து விஜய்யை கரூருக்கு இழுத்துச் சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ்வின் இந்த செயல்பாடுகளை கணக்கில் கொண்டுதான் மார்ட்டினின் மகன் சார்லசுக்கு போட்டி யாக ஜெகத்ரட்சகனை பாண்டிக்கு அனுப்பி ‘2026ல் பாண்டியில் தி.மு.க. ஆட்சி’ என்கிற கோஷத்தோடு வேலை பார்த்துக்கொண்டி ருக்கிறது தி.மு.க. தலைமை. ஆதவ், அவரது ட்விட்டரில் “"நேபாளத்தில் நடந்தது போல இளைஞர்கள் புரட்சி தமிழகத்தில் வெடிக்கும்'” என போட்ட ட்வீட்டை வைத்து வழக்குப் போட்டிருக்கிறது தமிழக காவல்துறை. அதற்கு எதிராக முன்ஜாமீன் கேட்டு உயர் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார் ஆதவ். எஸ்.வி.சேகர் வழக்கில் அவர் ஊடக மற்றும் பெண் செய்தியாளர்களைப் பற்றி முகநூலில் பதிவிட்ட அவதூறு கருத்தை அவரே அழித்துவிட்டார் என்கிற வாதத்தைப் போலவே, ‘"நான் போட்ட ட்வீட்டை நானே அழித்துவிட்டேன்'’என ஆதவ் அர்ஜுனா, தனது முன்ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். “"எஸ்.வி.சேகருக்கு அவரது பதிவுகளுக்காக இரண்டு மாத தண்டனையை உயர்நீதிமன்றம் கொடுத்தது போல ஆதவ்வுக்கும் தண்டனை வழங்கப்படும்'”என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
“இதற்கிடையே விஜய்யை மறுபடியும் பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகி வருகிறார் ஆதவ். இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் ரசிகர்களை ஒரே இடத்தில் ஊர்வலமாக திரட்டிவந்து பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் அவர். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில்லை’என்பதைப் போல லாட்டரி மார்ட்டினின் அதிகார வெறியும் பா.ஜ.க.வின் அரசியல் ஆசையும் விஜய்யை சும்மா இருக்கவிடாது. ஆதவ் ‘ட்வீட்டில் சொன்னபடி தமிழகத்தில் கலவரம் செய்யவும் திட்டம் இருக்கிறது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தாமரை மலர கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.”என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.